Sunday, 8 May 2011

பழைய பள்ளிவாசலுக்கு அருகில் புதியதோர் பள்ளிவாசலை நிர்மாணிப்பது பற்றிய இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு!

கேள்வி: பழைய பள்ளிவாசலில்  சகலருக்கும் போதுமான இட வசதிகளுண்டு. இருந்த போதிலும் பழைய பள்ளிவாசலிலிருந்து சுமார் இருநூறு  மீற்ர் தொலைவில் புதிதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்தல்    பற்றிய இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு என்ன?


குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பள்ளிவாசலில் மக்களுக்கு போதுமான இடவசதியிருப்பின், பழைய பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் புதிய பள்ளிவாசலை அமைப்பது கூடாது. பழைய பள்ளிவாசலில் இடவசதி போதாது என்றிருந்தாலும் பழைய பள்ளிவாசலுக்கு பக்கத்தில் புதிய பள்ளிவாசலை அமைப்பது கூடாது.
பழைய பள்ளிவாசலில் இடவசதி போதாத சந்தர்ப்பத்தில்  அப்பகுதி மக்களுக்கு போதுமானதாக பழைய பள்ளிவாசலை பெரிதாகக் கட்டுகின்ற பணியே மேற்கொள்ளப்பட  வேண்டும். ஏனெனில் முஸ்லிம்கள், தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமான நிலையில்  பரஸ்பரம்  உதவி செய்துகொள்வதும் அதிகமான மக்களை ஒரே பள்ளிவாசலில் சேர்ப்பதும் பள்ளிவாசல்கள் அமைக்கப்புடுவதின் நோக்கங்களில் உள்ளதாகும். இங்கு அவதானிக்கத்தக்க விடயம் யாதெனில், ஹதீஸ்களில் வருவது போன்று,   அல்லாஹுத்தஆலா தூரப்பகுதியில் இருந்து தொழுகைக்காக பள்ளிவாசலை நோக்கி நடந்து வருபவருக்கு அதிக நன்மைகளை  வைத்திருக்கிறான் என்பதாகும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தொழுகையில் மிக அதிகமான நன்மை  கிடைக்கப் பெறுபவர் யாரெனில் அவர்களில் தூர இருப்பவரே. அவர்களில் தூரத்தில் இருந்து நடந்து வருபவரே'    
ஆதாரம்- புகாரி, முஸ்லிம் )


 இஸ்லாமிய அறிஞர்கள், பழைய பள்ளிவாசலுக்கு அருகில் புதிய பள்ளி வாசல் அமைத்தல்  என்ற விடயத்தை  (மஸ்ஜித் ளிரார் ) தொல்லை தரும் பள்ளிவாசலாகவே கருதுகின்றனர். ஏனெனில் புதிய பள்ளிவாசல் நிர்மாணம் முஸ்லிம்களின் கூட்டமைப்பை பிளவுப்படுத்துவதற்கு காரணமாக அமைகின்றது.


இமாம் அஸ்- ஸுயூத்தியின் கருத்துப்படி ‘ஒரு பகுதியில் அதிகமான பள்ளிவாசல்கள் இருப்பது  நபிகள்   நாயகம் (ஸல் ) அவர்களின் அழகிய வழிமுறைக்கு  முரணான நூதனமாகும் (புதிய விடயமாகும்)’ ( நூல்:கிதாபுல் அமர் பில் இத்திபாஇ வன்னஹ்யி அனில் இப்திதாஇ பக்கம் 300. )


(நூல்: இஸ்லாகுல் மசாஜித் பக்கம் 96) பழைய பள்ளிவாசலுக்கு அருகில் புதிய பள்ளிவாசலை அமைப்பதால்  கூட்டமைபில் (ஜமாத்தில்) பிளவும், ஒற்றுமையில் வேற்றுமையும், வணக்கங்களில் இருந்த ஒருமித்த கட்டுக் கோப்பில் தளர்வும், ஏற்பட காரணம் ஆகி விடுகின்றது. மேலும் மக்களிடம் இருந்த அழகிய அம்சம் நீங்கவும், வணக்கவாளிகள் விரண்டு ஓடவும், வேறுபட்ட கருத்துக்கள் தோன்றவும், பல்வேறு ஒன்றுகூடும் தளங்கள் உருவாகவும் காரணமாகின்றது. அத்தோடு, அல்லாஹுத்தஆலா கூட்டமைப்பை விதியாக்கியதன் நோக்கத்துக்கு முரணாகவும் இது காணப்படுகின்றது. மேலும் பழைய பள்ளிவாசலுக்கு பாதிப்பு அல்லது சிறிய அளவில் பாதிப்பு ஏற்படவும் காரணமாகின்றது.


மேலும்  பிரபல்யம் அடைய  வேண்டும், பெயர் பெற வேண்டும் என்ற விருப்பும்   இதன் மூலம் ஏற்படுகின்றது. மேலும் எந்தத் தேவையும் இன்றி அனாவசியமாக செல்வங்களை விரயம் செய்தல் என்ற விடயமும் இதில் இருக்கின்றது.


இப்னுல் முப்லிஹ் : 'தீங்கு ஏற்படுத்தும் வகையில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட முடியாது' எனக்கூறுகிறார்.
முஹம்மது இப்னு மூஸா : 'ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் மற்றும் ஒரு பள்ளிவாசல் கட்டப்படலாம், என்றும் பள்ளிவாசல்கள் ஒன்றுகொன்று எதிர்ப்புக் காட்டுவதற்காக  கட்டப்பட முடியாது.' என்றும் கூறுகிறார் ( நூல் அல்புரூஉ38/2 )


ஹன்பலி நூல்களில் ஒன்றான அல் முன்தகாவில் இருப்பதாவது 'அருகிலுள்ள   பள்ளிவாசலுக்கு தீங்கை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு பள்ளிவாசல் கட்டபடுவது ஹராம் ஆகும்'.



ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா தேர்ந்தெடுத்த கருத்து யாதெனில், 'ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் இன்னுமொரு பள்ளிவாசலைக் கட்டுவது ஹராமாகும். மேலும் புதிய பள்ளிவாசலை இடித்துப் போடுவது கடமையாகும்.ஏனெனில் புதிய பள்ளிவாசல் தொல்லை தரும் பள்ளிவாசலாகும் (மஸ்ஜிதுல் ளிரார்).



இந்தக் கருத்தை அல் மர்தாவி தஸ்ஹிஹூல் புளூவு (39/2) என்ற நூலில் சரி காண்கிறார்.


இமாம் அல் குர்குதபி:'எமது அறிஞர்களின் கூற்றுப்படி, ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் இன்னொரு பள்ளிவாசலை கட்டுவது கூடாது. புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசலை இடிப்பது கடமையாகும். மேலும்  பழைய பள்ளி வாசலை விட்டு புதிய பள்ளிவாசலுக்கு மக்கள் செல்வதன் மூலம் பழைய பள்ளி வாசல் வெறுமையாகி விடும் என்பதால்  பழைய பள்ளிவாசலை விட்டும்  புதிய பள்ளி வாசலுக்கு  மக்கள் செல்லாமல் இருக்க, புதிய பள்ளிவாசல் கட்டப் படுவதைத்  தடுப்பது கடமையாகும். ஆயினும் வாழும் பகுதி பெரிதாகவும், ஒரு பள்ளிவாசல் அப்பகுதி மக்கள் அனைவருக்கும் போதாது என்றிருப்பின், அப்போது புதிதாக பள்ளிவாசல் கட்டப்படலாம்'. நூல்: தப்சீர், குர்துபி 254/8


பள்ளிவாசல் பழையதாக இருக்கும் போதெல்லாம் அது மிக சிறப்புக்குரியதாகும்.அதில் அதிக நன்மை உண்டு. பள்ளிவாசலின்  பழைமை என்ற விடயம் போற்றத்தக்க விடயங்களில் ஒன்றாகும்.



(குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானி க்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது. (அல்ஹஜ் 22:33)  



(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும்உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (ஆலு இம்ரான் 3:96) 


நிச்சயமாக பழமை என்ற விடயத்தில் அதிகமாக இபாதத் செய்யப்பட்டது, என்பதால்  அது கூடுதலான சிறப்புக்குரியது என்பதும்  அவதானிக்கத்தக்கது. நூல்: மஜ்முஉல் பாதாவா 469/17


சுருங்கக்  கூறுவதாயின்: மேலே விளக்கப்பட்டது போல் பழைய பள்ளிவாசலுக்கு அருகில் புதிய பள்ளிவாசல் அமைப்பது கூடாது.

நூல் :பாதாவா யஸ் அலூநக . உசாமுத்தீன் இப்னு மூஸா அபானா.

No comments:

Post a Comment